கட்சிக்கு எதிராக செயல்பட்டால் இதுதான் கதி: எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில், அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “கடந்த 6 மாதங்களாகவே செங்கோட்டையனின் நடவடிக்கைகளை நாங்கள் பார்த்து வருகிறோம். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முடிவடைந்த நிலையில், கட்சி சார்பற்ற விழாவாக நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை என வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு கருத்தை சொன்னார். அப்போது, விவசாயிகள் மற்றும் பொது நல சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வதால், கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறாது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அளித்த விளக்கத்தையும் அவர் ஏற்கவில்லை. ஆனால், அவரது தொகுதியில் நடைபெற்ற ‘விலையில்லா சைக்கிள்’ தரும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அங்கு ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் இடம் பெறவில்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படங்கள் மட்டுமே இருந்தன. அப்போது இருந்தே அவர் திமுகவின் பி-டீம் வேலையை ஆரம்பித்து விட்டார். கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறுவது சரியான கருத்தல்ல. ஏனென்றால், அவருடன் இருப்பவர்கள் எல்லாம் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அல்ல... நீக்கப்பட்டவர்கள். குறிப்பாக, ஓபிஎஸ் நீக்கப்பட்ட பிறகு, அவருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி ஏக மனதாக நிறைவேற்றிய தீர்மானம். பொதுக்குழு எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். கட்சிக்கு எதிராக செயல்பட்டால் இதுதான் கதி. இது நான் எடுத்த நடவடிக்கை இல்லை. அதிமுக சட்ட விதியின்படி எடுக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் ’நான் அம்மா விசுவாசி’ எனக் கூறி செங்கோட்டையன், அமைச்சராக இருக்கும் போது எதற்காக ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார்? அதே போல 10 ஆண்டுகளுக்கு முன்பே டி.டி.வி. தினகரனையும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஜெயலலிதா நீக்கினார். ஜெயலலிதா இருக்கும் வரை தினகரன் சென்னைக்குள் வரவில்லை. வந்தாலும் இருக்கும் இடம் தெரியாது. அவ்வப்போது பச்சோந்தியாக மாறும் நபர்கள் அதிமுகவை பற்றி பேசக் கூடாது. செங்கோட்டையனை பொறுத்தவரை சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் எப்போதும் திமுகவை எதிர்த்துப் பேசியதே கிடையாது. ஆகையால், அவர் திமுகவின் பி-டீம் என்பது நிரூபணமாகிவிட்டது. அதிமுக சாதாரண இயக்கமல்ல. இரண்டரை கோடி தொண்டர்களின் இயக்கம். அதை முடக்கவோ அல்லது அவதூறு பேசி பலவீனப்படுத்தவோ முற்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். அதிமுகவுக்கு விரோதமாக செயல்பட்டால் தலைமை வேடிக்கை பார்க்குமா?” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
