கரூர் விபத்துக்கு காரணமானவர்களை காப்பாற்ற திமுக முயற்சி: நயினார் நாகேந்திரன்

கரூர் விபத்துக்கு காரணமானவர்களை காப்பாற்ற திமுக முயற்சி: நயினார் நாகேந்திரன்
X
கரூரில் 41 பேர் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை காப்பாற்றும் முயற்சியிலேயே திமுக அரசு ஈடுபட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அங்கம் வகிக்கிறது. அவர்கள் கட்சி பிரச்சனையின் நான் எந்த கருத்தும் கூற முடியாது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சிலர் அதிகமான தொகுதிகளை கேட்கிறார்கள், சிலர் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். அது வேறு விஷயம். எங்களுக்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை சுதந்திரமான அமைப்புக்கள் அவற்றுக்கும் பா.ஜ.க விற்கும் எந்த சம்மதமும் கிடையாது. ஆளுங்கட்சியாக திமுக இருக்கும் பொழுது அவர்கள் அமைச்சருக்கு எதிராகவே எப்படி வழக்கு பதிவு செய்வார்கள்? கரூரில் 41 பேர் இறந்த போதும் அதற்கு சம்மந்தப்பட்டவர்களை காப்பாற்றவே முயற்சி செய்தார்கள். அதே போல கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திலும் அதற்கு தொடர்புடையவர்களை காப்பாற்றவே இந்த அரசு முயற்சி செய்தது. தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதாக திமுகவினர் திரும்பத் திரும்ப பொய் கூறி வருகிறார்கள். பீகார் மக்களை வந்தேறிகள் என்றும் பாணி பூரி விற்பதற்காக வந்துள்ளார்கள் என்றும் முதல்வர், அமைச்சர்களே பேசி உள்ளார்கள். திமுகவினர் இவ்வாறு பேசியதாக பிரதமர் பேசியதை திமுகவினர் மடைமாற்றி வருகிறார்கள். மொழி வாரியாக மாநிலத்தை பிரித்தாலும் சூழ்ச்சியை திமுக தொடங்கியுள்ளது. மக்கள் இதை புரிந்து கொள்வார்கள் மக்கள் மனமாற்றத்திற்கு தயாராக இருக்கிறார்கள்” என்றார்.

Next Story