கூட்டத்திற்கு முதல்வர் வராதது ஏன்?: ஜெயக்குமார்

கூட்டத்திற்கு முதல்வர் வராதது ஏன்?: ஜெயக்குமார்
X

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 

கூட்டத்திற்கு முதலமைச்சர் வராதது ஏன் என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜெயக்குமார், பாரபட்சமின்றி பொதுவான வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்காதது ஏன்? முதல்வர் தலைமையில்தான் இந்த கூட்டம் நடந்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஏன் வரவில்லை. அதிமுக ஆட்சியில் விருப்பு, வெறுப்பின்றி பிற கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றத்தைதான் நாட வேண்டியுள்ளது. கூட்டங்களுக்கான விதி அனைத்து கட்சிக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. அதை எந்த காலத்திலும் தடை செய்யக்கூடாது. அனைவருக்கும் சமம் என்ற முறையில் விதிகளை வகுக்க வேண்டும். சிறப்புத் திருத்த படிவங்களை வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டுமே விநியோகித்து திரும்பப்பெற வேண்டும்” என்றார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ்-ஐ குற்றம்சாட்டி டிடிவி தினகரன் பேசியது குறித்த கேள்விக்கு, டிடிவி தினகரன் ஒரு கற்பனாவாதி. அவரின் பேச்சுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Next Story