கோயில் நிதியில் கல்லூரி தொடங்க எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமியை கண்டித்து 14ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக மாணவர் அணி அறிவிப்பு

dmk student wing
சென்னை திமுக மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி வெளியிட்ட அறிவிப்பு: ஏழை, எளிய, சாமானிய மாணவர்களுக்கு உயர்கல்வி பெற தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கல்லூரிகளை திறந்து வைத்ததை “கல்லூரிகளைத் திறப்பது சதிச்செயல்” என பதவி சுகத்துக்காக அண்ணாவை அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி இப்போது, “உங்களுக்கெல்லாம் எதற்கு கல்வி?” என்ற சங்கிகளின் குரலாய் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறார். கோவில்களுக்கு மக்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உபரி நிதியிலிருந்து கல்வி நிலையங்கள், சிறார், முதியோர் பராமரிப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் அமைக்கலாம் என்பது இந்து சமய அறநிலையத்துறையின் சட்டங்களில் ஒன்று. ஆனால் அதுகூடத் தெரியாமல் திராவிட இயக்கத்தின் துரோகியாக, கல்விக்காக திராவிட மாடல் அரசு எடுக்கும் முன்னெடுப்புகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக கோவையில் பேசியுள்ள எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் வரும் 14ம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில், கோவை, டாடாபாத், சிவானந்தா காலனியில் திமுக மாணவர் அணி செயலாளர் இரா.ராஜீவ்காந்தி தலைமையில் மாணவர் அணி மாநில துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், சேலம் இரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், தமிழ் கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், வி.ஜி.கோகுல், பூர்ண சங்கீதா சின்னமுத்து, ஜெ.வீரமணி, ஜெ.இராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ”மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.