இன்னும் 140 நாட்கள் தான்; திமுக அரசுக்கான இறுதி கவுன்டவுன் தொடங்கிவிட்டது: நயினார் நாகேந்திரன்

ராஜராஜசோழனின் 1040 ஆவது சதய விழா நேற்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து கருத்தரங்கம், கவியரங்கம், பரத நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து, சதய விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை திருக்கோயிலில் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. இதன் பிறகு திருமுறை நூல்களை அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து 100-க்கும் மேற்பட்ட ஓதுவாமூர்த்திகளுடன் கோயிலிருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 39 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் இணைந்து செய்திருந்தனர். அந்த வகையில், பாஜக சார்பில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாக வந்து ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் செய்யவில்லை. திமுக அரசுக்கான இறுதி கவுன்டவுன் தொடங்கி விட்டது. திமுக அரசுக்கு இன்னும் 140 நாட்கள் மட்டுமே இருக்கிறது. இந்த 140 நாட்களில் என்ன செய்ய போகிறார்கள். ஒன்றுமே செய்ய முடியாது. அடுத்ததாக தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் ஆட்சி மாற்றம் வரும்'' என்று தெரிவித்தார். இந்த பேட்டியின் போது மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் இருந்தனர்.
