அமித்ஷா கொடுத்த லிஸ்ட்.. ஆடிப்போன வேலுமணி.. திருச்சியில் ரகசிய சந்திப்பு

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக - பாஜக கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்துள்ளார். அவரின் நிகழ்வை அதிமுக புறக்கணித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அமித்ஷா அவரின் கையில் ஒரு லிஸ்ட் கொடுத்து அதிரடியாக சொன்ன விஷயம் அதிமுகவில் புயலை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆட்சியை தக்க வைக்க திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிக்க அதிமுக கூட்டணியும் முட்டி மோதி வருகின்றன. திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்கிற அஜென்டாவுடன் டெல்லி பாஜக களமிறங்கியுள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலைநிமிர தமிழன் என்கிற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் நிறைவு கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டார். அமித்ஷா 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார்.
புதுக்கோட்டை கூட்டத்திற்கு பிறகு அவர் நேற்று திருச்சி சென்றார். திருச்சியில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக நேற்று இரவு அவர் தனியார் ஹோட்டலில் தங்கினார். அமித்ஷாவுடன் புதுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை.
மேலும் திருச்சி, புதுக்கோட்டையில் அதிமுக நிர்வாகிகள் அமித்ஷாவை வரவேற்க கூட செல்லவில்லை. அமித்ஷாவை அதிமுக புறக்கணித்துவிட்டது என்று தகவல் வெளியானது. ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேற்று இரவு அமித்ஷாவை சந்தித்தார். புதுக்கோட்டை கூட்டத்தை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு அமித்ஷா திருச்சி தனியார் ஹோட்டல் வந்தார்.
அங்கு சிறிது நேரம் அவர் ஓய்வு எடுத்த நிலையில், இரவு 9.45 மணியளவில் வேலுமணி சென்றுள்ளார். அங்கு சிறிது நேரம் அமித்ஷா - வேலுமணி மட்டும் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். "எடப்பாடி பழனிசாமி சேலத்தில் ஏற்கனவே பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டதால், வரமுடியவில்லை." என்று வேலுமணி கூறியுள்ளார்.
பிறகு தமிழ்நாடு அரசியலின் தற்போதைய நிலவரம், அதிமுக - பாஜக கூட்டணி பஞ்சாயத்துகள், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. திமுகவை வீழ்த்த என்ன வியூகங்கள் அமைக்க வேண்டும் என்றும் ஆலோசனை நடத்தினார்கள். இந்த சந்திப்பின் இறுதியில் நடந்தது தான் மெகா டிவிஸ்ட்.
வேலுமணி கையில் ஒரு பட்டியலை கொடுத்த அமித்ஷா, "இதில் இடம் பெற்றுள்ள தொகுதிகளில் எல்லாம் பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ளோம். இந்த தொகுதிகள் எங்களுக்கு வேண்டும்" என்று அழுத்தமாகவே கூறிவிட்டாராம். இதை எதிர்பார்க்காத வேலுமணி குழப்பத்துடன் அங்கிருந்து வெளியேறினார். இந்நிலையில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மன்னார்புரம் பொங்கல் விழாவில் அமித்ஷா கலந்து கொள்ளவுள்ளார். அதனை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள், மூத்த நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது.
