மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் திமுகவினரின் ஊழல்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்:

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், திமுகவினர் புரிந்த ஊழல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்றப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி நடக்கலாம். ஆனால், சேலம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சிதான் நடக்கிறது.
அதிமுக கொண்டு வந்த திட்டங்களை மட்டுமே செயல்படுத்தும் திமுக ஆட்சி தேவை இல்லை என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிய திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
லஞ்சம், ஊழல் செய்வதில்தான் திமுக சிறந்த ஆட்சியாக இருக்கிறது. சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஸ்டாலினின் குடும்பத்தை மீறி, வேறு யாரும் திமுகவில் பதவிக்கு வரமுடியாது. கடந்த தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
பட்டியலிட முடியுமா? - அதிமுக ஆட்சியில் நாங்கள் என்ன செய்தோம் என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார். திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை அவரால் பட்டியலிட முடியுமா? அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய பல திட்டங்களை முடக்கிவிட்டார்கள். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக-வுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருக்குமா என்பதே சந்தேகம்தான்.
தற்போது ஊழலில் ஈடுபட்டு வரும் திமுகவினர் மீது, அடுத்து மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், திமுகவினரும் கைது செய்யப்படுவார்கள்.
எனவே, வரும் தேர்தலில் அதிமுக பெரும்பான்மை இடங்களைப் பிடித்து, அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி பெற அதிமுகவுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு பழனிசாமி பேசினார். கூட்டத்தில், அதிமுக மாவட்டச் செயலாளர் இளங்கோவன், வீரபாண்டி தொகுதி எம்எல்ஏ ராஜா, முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
