பள்ளிக்கூடத்திற்குள் இதை செய்தால் மாணவர்களிடையே மத சண்டை வராது: அண்ணாமலை

annamalai
கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரையில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், கற்றல் என்பது 20 சதவீதம் மட்டுமே பள்ளிக்கூடத்தில் கிடைக்கிறது. 80 சதவீதம் வெளியே கிடைக்கிறது. வெளியே கிடைக்கும் அறிவை ஊட்டுகின்ற பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. டவுன் பஸ்சில் ஒரு குழந்தை ஏறி இறங்குகிறது என்றால் அந்த அறிவு கிடைக்கிறது. நாம் எப்படி நடந்து கொள்கிறோம் அதை ஒரு குழந்தை பார்த்தால் அங்கு அறிவு கிடைக்கிறது. ஒரு வீட்டிற்குள் தந்தை, தாய் எப்படி நடந்து கொள்கிறார்கள் அதை பார்த்து குழந்தைக்கு அறிவு கிடைக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் என்கிறோம். வீட்டில் அப்பா அம்மாவை சரியாக நடத்தவில்லை என்றால் ஆணும் பெண்ணும் சமம் இல்லை என்ற அறிவு குழந்தைக்கு மனதுக்குள் போய்விடும். வீட்டில் அப்பா அம்மாவை எப்படி அழைத்து பேசுகிறார், வேலைகளை எப்படி பகிர்ந்து செய்கிறார்கள், அந்த வீட்டில் பெரியோர்களுக்கான மரியாதை எப்படி இருக்கிறது. இந்த 80 சதவீதம் கற்றல் என்பது பள்ளிக்கூடத்திற்கு வெளியே தான் நடக்கிறது. ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகப்பெரிய சமுதாய பொறுப்பு இருக்கிறது. நாம் குழந்தைக்கு கற்றல் அறிவை வெளியே கொடுத்தால் மட்டும் தான் இங்கே கிடைக்கக்கூடிய 20 சதவீத கற்றலை முழுமையாக கிரகித்து அந்த குழந்தை சுவாமி விவேகானந்தர் கேட்ட முழுமையான ஒரு குழந்தையாக இந்த பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியே வரும். ஆன்மிக அறிவு இருந்தால் மட்டும்தான் ஒரு வாழ்க்கையை சமமாக பார்க்கக்கூடிய ஒரு பண்பு கிடைக்கும். secular education என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். அதன் அர்த்தம் எந்தவொரு மதத்தையும் சிறுமைப்படுத்தாமல் இருப்பது தான். எந்தவொரு மதத்தை பற்றியும் பேசாமல் இருப்பது secular education கிடையாது. ஒரு மதத்தை சிறுமைப்படுத்தாமல் எல்லா மதத்தையும் சமமாக மதிக்கக்கூடிய ஒரு கல்வி secular education. இன்றைக்கு ஒரு மதத்தை சார்ந்த, எல்லா மதத்தையும் சொல்லிக்கொடுக்கக்கூடிய கல்வி ஒரு பள்ளிக்கூடத்தில் இருக்க வேண்டும். அரசு சொல்கிறதோ இல்லையோ, பகவத் கீதையின் 18 அத்தியாயத்தையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். 8 முதல் 12-ம் வகுப்பு முடிக்கும்போது அந்த குழந்தைக்கு ஸ்லோகம் தெரிந்து இருக்கும். பகவத் கீதையின் கருப்பொருள் தெரிந்து இருக்கும். மகாபாரதம் ஒரு பாடமாக சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த குழந்தை மேடையில் நாடகம் போடும்போது ஒரு பகுதியை எடுத்து செய்ய வேண்டும். அதே குழந்தைக்கு குரானில் என்ன சொல்கிறார்கள் என்ற புரிதல் இருக்க வேண்டும். அது இந்து மதத்தை பின்பற்றக்கூடிய குழந்தையாக இருந்தாலும் மற்ற மதத்தின் அடிப்படையை சொல்லிக்கொடுத்து தான் பள்ளிக்கூடத்தை விட்டு அனுப்ப வேண்டும். கிறிஸ்துவ மதத்தின் அடிப்படையும் அந்த குழந்தைக்கு தெரிந்து இருக்க வேண்டும். Lent என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன? 7-வது நாள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சினகாக் யூத கம்யூனிட்டி சொல்கிறார்களே அது என்ன? இதை எல்லாம் அந்த குழந்தைக்கு சொல்லிக்கொடுத்து அனுப்பினால் தான் இந்து, முஸ்லீம் சண்டை வராது. நம்முடைய மதத்தை உயர்வாக நினைக்கும் ஒரு சிலர் மற்ற மதத்தை பற்றி தாழ்வாக நினைக்கிறார்கள். அவர்களுக்கு மதத்தை பற்றிய புரிதல் இல்லை. நாம் secular education என்ற போர்வையில் பள்ளிக்கூடத்தில் அதை எல்லாம் பிடுங்கி எறிந்து விட்டோம். பள்ளிக்கூடத்தில் எல்லா மதத்தை பற்றியும் அடிப்படை புரிதல் ஒரு குழந்தைக்கு தெரிந்தால் மட்டும் தான் அந்த குழந்தை ஒரு மனிதனை சகோதரனாக, சகோதரியாக, எல்லா மனிதனையும் சமமாக, இன்னொரு மதத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை கையில் எடுக்கும். நான் எல்லா பள்ளிக்கூடத்திலும் என்னுடைய பேச்சில் இதை சொல்கிறேன். குழந்தைக்கு ஆன்மிகத்தை, தர்மத்தை, மாற்று மதமாக இருந்தாலும் எடுத்து சொல்லிக்கொடுங்கள். 12-ம் வகுப்பிற்குள் அவர்களுக்கு என்ன மனது உருவாகிறதோ அது தான் அவர்களுடைய வாழ்க்கை. அதன்பிறகு அது உருவாகாது என்று கூறினார்.