கூட்டணியின்றி வெல்ல முடியாது.. அதிகாரப்பகிர்வு பற்றி பேசப்பட வேண்டிய நேரம் இது! - மாணிக்கம் தாகூர்

கூட்டணியின்றி வெல்ல முடியாது.. அதிகாரப்பகிர்வு பற்றி பேசப்பட வேண்டிய நேரம் இது! - மாணிக்கம் தாகூர்
X
கூட்டணியின்றி வெல்ல முடியாது.. அதிகாரப்பகிர்வு பற்றி பேசப்பட வேண்டிய நேரம் இது! - மாணிக்கம் தாகூர்

தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் யாராலும் வெற்றி பெற முடியாது என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியிருக்கிறார். ஏற்கெனவே விஜய்யின் தமிழக வெற்றிக்கழத்துடன், காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக பேச்சுக்ககள் அடிப்பட்டிருந்தன. இப்படி இருக்கையில் மாணிக்கம் தாகூரின் பேச்சு கவனம் பெற்றிருக்கிறது.

கூட்டணி இன்றி தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது என்றும், அதிகாரம் மட்டுமல்ல அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் மாணிக்கம் தாகூர் கூறியிருக்கிறார்.

இது குறித்து தனது x பக்கத்தில், "யாருக்கு வாக்கு?" - IPDS தரவு சொல்லும் தகவல். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால், கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல - அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே!" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், திமுகவுடனான காங்கிரஸின் உரசல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிசிஸ்ட் பிரிவு தலைவரும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தி, உத்தரப் பிரதேசத்தை விட தமிழகம்தான் அதிகம் கடன் வாங்குவதாக கூறி, கூட்டணியிடையே பற்ற வைத்திருந்தார். இருப்பினும் செல்வப்பெருந்தகை, எம்பிகள் ஜோதிமணி, சசிகாந்த் செந்தில் ஆகியோர் பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இப்படியாக இந்த சலசலப்பு முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மாணிக்கம் தாகூர் மூலம் சரச்சை எழுந்திருப்பது எதிர்க்கட்சிகளிடம் கவனம் பெற்றிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து பேசும் அரசியல் விமர்சகர்கள், வழக்கமாக காங்கிரஸ் அதிக தொகுதிகளில் போட்டியிடுவதை விரும்புகிறது. ராகுல் காந்திதான் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். எத்தனை இடங்களில் வெற்றிப்பெருகிறோம் என்பது முக்கியமில்லை. எத்தனை இடங்களில் போட்டியிடுகிறோம் என்பதுதான் முக்கியம். இப்போதைக்கு இந்த யுக்தி வெற்றிப்பெறாவிட்டாலும், எதிர்க்காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு இது உதவும் என்று ராகுல் காந்திக்கு யாரோ சொல்லியிருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

பீகார் தேர்தலிலும் இதுதான் நடந்தது. அதிகமான தொகுதிகள் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று அடம்பிடித்தார்கள். ஆனால் என்ன ஆனது? இப்படி கேட்டு பெற்ற தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் மண்ணை கவ்வினார்கள். எனவே அதிக தொகுதிகளை கேட்பதன் மூலம் எதிரக்கட்சிகளின் வெற்றி வாய்ப்பைதான் காங்கிரஸ் அதிகரிக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

Next Story