மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது: ராமதாஸ்

மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது: ராமதாஸ்
X

Ramadoss

மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 132 ஏக்கர் நிலப்பரப்பில் 765 கிலோ வோல்ட் திறன்கொண்ட துணை மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது. அங்கிருந்து அரியலூர் வரை மின்பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இந்தப் பணிகளை செய்து முடிக்க ரூ.4,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தை தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த தமிழக அரசு தீர்மானித்திருக்கிறது. கடந்த ஆட்சியிலேயே பல துணை மின்நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இப்போது ரூ.4500 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையமே அமைக்கப்பட்டால், அது படிப்படியாக மின்சார வாரியம் தனியார் மயமாகவே வழிவகுக்கும். தமிழ்நாடு மின்வாரியம் ஏற்கனவே கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், மின்சாரத்தை கொண்டு செல்வதற்காகவும் தனியாருக்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் தமிழ்நாடு மின்சார வாரியத்தை இலாபத்தில் இயக்குவது எப்படி சாத்தியமாகும்? மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கு மட்டும் தான் இது வழிவகுக்கும். எனவே, 765 கிலோ வோல்ட் துணை மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். அந்தத் திட்டத்தை மின்தொடரமைப்புக் கழகமே சொந்த முதலீட்டில் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story