த.வெ.க. தலைவர் விஜய்க்கு மணிப்பூரை சுற்றிக்காட்ட நான் தயார்: அண்ணாமலை
Annamalai & Vijay
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு, எழுத்தாளரும், சமூக உரிமை போராளியுமான ஆனந்த் டெல்டும்ப்டே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் பேசிய அவர், இன்று மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவை எதையும் கண்டு கொள்ளாமல் ஒரு அரசு மேலிருந்து நம்மை ஆட்சி செய்கிறது" என்று தெரிவித்தார். இந்நிலையில், விஜய் மணிப்பூர் செல்ல தயாராக இருந்தால், அவருக்கு மணிப்பூரை சுற்றிக்காட்டுவதற்கு நான் தயார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, அடிப்படை அரசியல் அறிவை த.வெ.க. தலைவர் விஜய் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆதாரத்தின் அடிப்படையில் விஜய் பேச வேண்டும். மணிப்பூர் பற்றி விஜய் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். யார் ஆட்சியில் அதிகமானோர் இறந்தார்கள்? மணிப்பூரில் என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள வேண்டும். ஆனந்த் டெல்டும்டே ஒரு நகர்ப்புற நக்சல். ஆனந்த் டெல்டும்டேவுக்கு விகடன் மேடை கொடுத்தது ஏன்? திருமாவளவன் செல்லாத நிகழ்ச்சிக்கு அவரது கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா எப்படி சென்றார்? விசிக யார் கையில் உள்ளது? விசிக திருமா கையில் உள்ளதா, துணைப் பொதுச் செயலாளர் கையில் உள்ளதா? விசிகவிற்கு ஒரு தலைமையா அல்லது இரண்டு தலைமைகளா? ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க திருமாவளவன் தயங்குவது ஏன்? என்று தெரிவித்தார்.