தேஜ கூட்டணியில் 3 சீட் ஒதுக்கீடா? கடுப்பான ஓபிஎஸ்

தேஜ கூட்டணியில் 3 சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக பரவிய தகவலுக்கு ஓபிஎஸ் மறுப்பு தெரிவத்துள்ளார். தேனி மாவட்டம், போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவச்சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெகவில் இணைந்துள்ள ஜேசிடி.பிரபாகரன் எங்களை விட்டு விலகிச் சென்று பல மாதங்களாகி விட்டது. ஆனாலும் தொடர்பில் உள்ளார். தேஜ கூட்டணியில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவிற்கு 3 சீட்டுகள் ஒதுக்கப்பட்டதாக வந்த செய்தி தவறானது. அதை யாரும் நம்ப வேண்டாம். தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம். நாங்கள் அமித்ஷாவிடம் சென்று தமிழகத்தினுடைய அரசியல் களம் நிலவரங்களை தெரிவித்துள்ளோம்.
அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் நிலையில், எடப்பாடி அதற்கு வாய்ப்பில்லை என்று கூறியது குறித்து, அவரிடம்தான் கேட்க வேண்டும். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பது சாத்தியப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கமே. அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தது நான் தான். செங்கோட்டையன் அல்ல. எம்ஜிஆருடைய இயக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பல சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி தற்போது வரை நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து போராடி வருகிறோம். உச்சநீதிமன்றம் வரை நாங்கள் சென்று, இரட்டை இலையையும் சேர்த்து வழக்கு தொடுத்துள்ளோம். சில வழக்குகளில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்புகளையும் வழங்கி உள்ளது. விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார்.
