கால்பந்து வரலாற்றில் 900 கோல்களுடன் சரித்திரம் படைத்த ரொனால்டோ

கால்பந்து வரலாற்றில் 900 கோல்களுடன் சரித்திரம் படைத்த ரொனால்டோ
X

ரொனால்டோ

கால்பந்து உலகின் ஜாம்பவான் வீரர் ஆன கிறிஸ்டியானோ ரொனால்டோ 900 கோல்களை அடித்து மாபெரும் வரலாற்றை படைத்து இருக்கிறார். கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை அவர் செய்து இருக்கிறார்.

2024 நேஷன்ஸ் லீக் தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி மோதியது. இந்த போட்டியின் 7வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் டியாகோ டாலட் முதல் கோலை அடித்தார். அடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். அது அவரது 900 ஆவது கோலாக அமைந்தது. இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த ஒரு கோல் மூலம் உலக அளவில் சாதனை படைத்து இருக்கிறார்.

39 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் உச்சகட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதை உறுதி செய்து இருக்கிறார். 2022 ஃபிபா உலகக் கோப்பை, 2024 யூரோ கோப்பை ஆகியவற்றில் ரொனால்டோ அதிக கோல்களை அடிக்கவில்லை. அதனால், அவர் மீது விமர்சனம் இருந்தது. இந்த நிலையில் அவர் நேஷன்ஸ் லீக் தொடரில் மாபெரும் மைல் கல் சாதனை படைத்து, தான் ஃபார்மில் இருப்பதை உறுதி செய்து இருக்கிறார். குரோஷியா அணிக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த கோல் அவரது 131 வது சர்வதேச கோல் ஆகும். ஒட்டுமொத்தமாக அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 900 கோல்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் மற்றொரு ஜாம்பவான் ஆன லியோனல் மெஸ்ஸி இருக்கிறார். அவர் 859 கோல்களை அடித்திருக்கிறார்.

ரொனால்டோ ரியல் மேட்ரிட் அணிக்காகவே அதிக கோல்களை அடித்திருக்கிறார். அந்த அணிக்காக மட்டும் 450 கோல்களை அடித்து இருக்கிறார். யுவன்டஸ் அணிக்காக சீரி ஏ தொடரில் 121 கோல்களை அடித்து இருக்கிறார். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 145 கோல்களையும், ஸ்போர்டிங் லிஸ்பன் அணிக்காக 5 கோல்களையும் அடித்து இருக்கிறார். அவர் தற்போது ஆடிவரும் அல் நசர் அணிக்காக 68 கோல்களை அடித்திருக்கிறார்.


Tags

Next Story