சபரிமலையில் மழை தாக்கத்தால் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

சபரிமலையில் மழை தாக்கத்தால் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
X

சபரிமலை

சபரிமலையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த இரு தினங்களில் மட்டும் 1.30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்த வருட மண்டல காலத்தில் நேற்று (2ம் தேதி) வரை கடந்த 18 நாளில் 12.75 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சபரிமலையில் பலத்த மழை பெய்து வருவதால் பம்பை உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. நேற்று முன்தினம் இரவு முதல் பம்பை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் பின்னர் வெள்ளம் குறைந்ததால் இந்தத் தடை நீக்கப்பட்டது. பக்தர்கள் நீர் நிலைகளில் கவனமாக இறங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சபரிமலையில் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன் மற்றும் முரளி கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய தேவசம் போர்டு பெஞ்ச் இது குறித்து கூறியது: சபரிமலையில் பலத்த மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பை தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டும். என்னென்ன கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து பத்திரிகைகள் மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

கொட்டும் மழையிலும் 80,000 பக்தர்கள் தரிசனம் சபரிமலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று இரவு வரை பெய்தது. நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்தபோதிலும் பக்தர்கள் அதை பொருட்படுத்தாமல் பம்பையிலிருந்து மலையேறி வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

நேற்று இரவு நடை சாத்தும் வரை 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மாலை 6 மணிக்குள் 71,922 பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பினர். அதிகபட்சமாக தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் நேற்று பலத்த மழையிலும் அதைவிட அதிகமாக பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வனப்பகுதி வழியாக செல்ல தடை சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் குமுளியில் இருந்து முக்குழி, சத்ரம் வழியாக நடந்து செல்வது உண்டு. இது வனப்பகுதி ஆகும். மண்டல, மகரவிளக்கு காலங்களில் மட்டுமே இந்த வனப்பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதுவும் பகலில் மட்டுமே இந்த வழியாக செல்ல அனுமதி உண்டு.

இந்தநிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் இந்த வனப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல தடை விதித்து இடுக்கி மாவட்ட கலெக்டர் விக்னேஷ்வரி உத்தரவிட்டுள்ளார். அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story