அவிநாசி புதுப்பெண் தற்கொலை வழக்கு: தலைமறைவான மாமியார் கைது!!

அவிநாசி புதுப்பெண் தற்கொலை வழக்கு: தலைமறைவான மாமியார் கைது!!
X

rithanya

அவிநாசி புதுப்பெண் தற்கொலை வழக்கில் தலைமறைவான மாமியார் கைது செய்யப்பட்டார்.

அவிநாசியில் புதுப்பெண் தற்கொலை செய்த வழக்கில் மாமியாரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாத்துரை (52), இவரது மனைவி ஜெயசுதா. இவர்களது மகள் ரிதன்யாவுக்கும் (24), அவிநாசியை அடுத்த பழங்கரையை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி – சித்ராதேவி தம்பதியின் மகனான கவின்குமார் (28) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 11ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ரிதன்யா கடந்த 28ம் தேதி கோயிலுக்கு செல்வதாக கூறி விட்டு, சேவூர் அருகே செட்டிபுதூர் பகுதியில் காரை சாலையோரத்தில் நிறுத்தி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன்பாக ரிதன்யா தந்தைக்கு அனுப்பிய வாட்ஸ் அப் ஆடியோவில், கவின்குமார் மற்றும் அவருடைய பெற்றோர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் உருக்கமாக கூறியிருந்தார். இந்த ஆடியோ வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து கவின்குமார் அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை கைது செய்து திருப்பூர் கிளை சிறையில் அடைத்தனர். கவின்குமாரின் தாய் சித்ராதேவிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் தலைமறைவானார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ரிதன்யா தரப்பில் அவரது தந்தை அண்ணாத்துரை ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என இடையீட்டு மனு அளித்திருந்தார். நேற்று நடந்த மனு மீதான விசாரணையில் கவின்குமார் தரப்பில் கால அவகாசம் கேட்டதால் திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதனை தொடர்ந்து ரிதன்யாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று மாவட்ட எஸ்பி., கிரீஸ் யாதவை சந்தித்தனர். அப்போது, ‘. வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும். அதே போல், செல்போனில் பேசிய பதிவுகளை நீதிமன்றத்தில் கொடுக்க வேண்டும். பூச்சி மருந்து எங்கிருந்து, எப்போது வாங்கினார் என விசாரிக்க வேண்டும். திருத்தப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூடுதல் நகை கேட்டு பேசியதால், வரதட்சணை கொடுமை சட்டப்பிரிவு, மற்றும் ரிதன்யா பேசி அனுப்பிய ஆடியோ ஆகியவற்றை இணைக்க வேண்டும். சித்ரா தேவியை கைது செய்த பின் 3 பேரையும் கஸ்டடி எடுத்து விசாரிக்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர். இதையடுத்து, ரிதன்யாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது மாமியார் சித்ராதேவியை சேவூர் போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் மோகன்குமார் கூறுகையில்,“திருத்தப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி அதிகப்பட்சமாக 3 முதல் 10 ஆண்டுகள் தான் தண்டனை கிடைக்கும். இதில், வரதட்சணை வன்கொடுமை சட்டப்பிரிவை போலீசார் சேர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும். அப்படி போலீசார் சேர்க்காமல் இருப்பதற்கு அரசியல் தலையீடு தான் காரணம் என தெரிய வருகிறது என்றார். ரிதன்யாவின் தந்தை நிருபர்களிடம் கூறுகையில்,“காவல்துறை நடவடிக்கையில் குறை இருக்கிறது. சித்ரா தேவியை உடனடியாக கைது செய்து சிறையில் வைத்து, அதன்பின் மருத்துவ சிகிச்சை போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளை கொடுமைப்படுத்திய சித்ராதேவி வெளியில் ஜாலியாக இருக்கிறார். உடல்நிலை சரியில்லை என்பதற்காக குற்றவாளி வெளியில் சுற்றலாமா?, என் மகள் தற்கொலை வழக்கை போலீசார் விரைந்து விசாரித்து சரியான முறையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.

Next Story