கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. ரயில்வே துறை விளக்கம்!!

train accident
கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று மாணவர்களை ஏற்றி கொண்டு இன்று காலை 7.45 மணி அளவில் கடலூர் – ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றது. அப்போது பள்ளி வேன் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். இதுபற்றி தகவலறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மாணவர் நிவாஸ் (12), மாணவி சாருமதி (16) என 2 பேர் பலியாகி உள்ளனர். வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த 4 மாணவர்கள் செழியன், விஷ்வேஸ், பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் ஆகியோருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தின்போது, ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. ரயில்வே கேட்டை மூடுவதற்காக இருந்த ரயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என கூறப்படுகிறது. அவர் பணியின்போது தூங்கியதில் ரயில் வரும்போது கேட் மூடாமல் விடப்பட்டு உள்ளது. இது விபத்திற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ரயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். இது குறித்து ரயில்வே துறை கூறுகையில், கேட் கீப்பர் முறையாக கேட்டை முறையாக கேட்டை மூட முயற்சித்துள்ளார். பள்ளி வேன் டிரைவர் தான் கேட்டை மூடக்கூடாது எனக் கூறியுள்ளார். ரயில் வருவதை அறிந்து, கேட்டை மூடும் போது பள்ளி வேன் டிரைவர் மீறி இயக்கி உள்ளார். செம்மங்குப்பத்தில் பள்ளி வேன்- ரயில் மோதி ஏற்பட்ட விபத்து காலை 7.45 மணிக்கு நிகழ்ந்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து கடலூர் – மயிலாடுதுறை மார்க்கத்தில் செல்லும் முக்கிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. தண்டவாளத்தை ஆய்வுசெய்த பிறகே ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளது என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விபத்து நடந்த இடத்துக்கு திருச்சி ரயில்வே எஸ்.பி. ராஜன் விரைந்துள்ளார். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், திருச்சி, சென்னை ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார். மேலும், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் விரைகின்றனர். இந்த விபத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியபோது ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.