கரூர் நெரிசல் வழக்கு; தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!

karur stamepede
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பு, "உயிரிழந்த சிறுவனுடைய தந்தையின் வலி எங்களுக்குப் புரிகிறது. அதே வேளையில் இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும், தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணைக் குழு அதிகாரியை நியமிக்கவில்லை. மாறாக உயர் நீதிமன்றம்தான் நியமித்தது. அஸ்ரா கர்க் என்ற மூத்த அதிகாரிதான் சிறப்பு விசாரணைக் குழுவினுடைய அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்த அதிகாரி சி.பி.ஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளில் பணியாற்றியவர். சிறந்த அதிகாரியாக இருந்து கொண்டிருக்கின்றார். எனவே இவருடைய விசாரணையே தொடரலாம். தன்னுடைய மகனை இழந்து இங்கு நிற்கக்கூடிய அந்த தந்தையினுடைய வலி மட்டுமல்ல, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடைய அனைவரின் வலியையும் நாங்கள் அறிந்துள்ளோம். அதேவேளையில், தான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்ற இந்த ஒரு காரணத்தின் அடிப்படைக் கொண்டு மட்டும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதிக்க கூடாது. ஏனெனில் கள நிலவரங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தமிழ்நாடு அதிகாரிகள். எனவே ஒரு சிறந்த அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர வேண்டும். இவ்வாறு பல வழக்குகளை தொடர்ச்சியாக சிபிஐ-க்கு மாற்றிக் கொண்டிருந்தால் சிபிஐ முன்பு அதிக அளவிலான வழக்குகள் குவிந்து கிடக்கும். ஆனால் சிபிஐக்கு இருப்பதோ Limited Resourceதான்” என வாதம் செய்தது. இதனை பதிவு செய்த உச்சநீதிமன்றம், கரூர் நெரிசல் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது.
