இனி வெள்ளியை அடமானம் வைத்தும் கடன் வாங்கலாம்!!

silver
2025ஆம் ஆண்டில் மட்டும் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், தங்கத்தில் மக்கள் முதலீடு செய்வது ஒருபக்கம் இருந்தாலும், அதனை வாங்குவது என்பது எட்டாங்கனியாக மாறி வருகிறது. அதே நேரத்தில், கடந்த சில மாதங்களாகவே வெள்ளி விலையும் உச்சத்திற்கு சென்றுவிட்டது. இதனால், பொதுமக்கள் வெள்ளியையும் வாங்க தொடங்கியுள்ளனர். ஆனால், வெள்ளி விலை எப்போது வேண்டுமானாலும் சறுக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இப்படியாக இருக்கும் நிலையில், நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. நகைக் கடன்களை முறைப்படுத்தவும் ரிசர்வ் வங்கி வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. நகைக் கடன் தொடர்பாக ஜூன் 6ஆம் தேதி ஆர்பிஐ சீர்திருந்தங்களை வெளியிட்டது. அதில், கடன் வாங்குபவர்களின் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் கடன் வழங்குபவர் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது. முதலில் தங்கத்தை வைத்து மட்டுமே, வங்கிகள் கடன் வழங்கி வருகிறது. இந்த நிலையில், தற்போது ஆர்பிஐ கொண்டு வந்த புதிய விதிமுறையின், வெள்ளியை வைத்து கடன் கொடுக்கலாம் என தெரிவித்துள்ளது. வெள்ளி காயின், வெள்ளி நகைகள் போன்றவற்றை வைத்து கடன் வாங்கலாம் என ஆர்பிஐ அறிவித்துள்ளது. ஏற்கனவே அடமானம் வைக்கப்பட்ட தங்கம்/வெள்ளியைப் பயன்படுத்தி மீண்டும் அடமானம் வைக்கவோ அல்லது கடன் கொடுக்கவோ முடியாது. கடன் வாங்குபவர்கள் இப்போது தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடனாகப் பெறலாம். முன்னதாக 75 சதவீதம் வரை மட்டுமே இருந்தது. உதாரணமாக, உங்கள் தங்கம் ரூ.1 லட்சம் மதிப்புடையதாக இருந்தால், இப்போது நீங்கள் ரூ.85,000 வரை கடன் வாங்கலாம். இதற்காக வட்டி, அசலையும் 12 மாதங்களுக்கு திருப்பி செல்லுதவும் ஆர்பிஐ கூறியுள்ளது. மேலும், வங்கிகளில் தங்கம், வெள்ளியை அடமானம் வைப்பது தொடர்பாக வரம்புகளை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 கிலோ தங்க ஆபரணங்கள், 50 கிராம் தங்க நாணயங்கள், 10 கிலோ வெள்ளி ஆபரணங்கள், 500 கிராம் வரை வெள்ளி நாணயங்களை வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இந்த வரம்பிற்குள் தான் வங்கிகள் கடன் வழங்கும் என தெரிவித்துள்ளது. கடன் வழங்குபவர்கள் அடமானம் வைத்த தங்கம் அல்லது வெள்ளியை கடன் முடிந்த அதே நாளில் அல்லது 7 வேலை நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும். தாமதமானால், கடனாளிக்கு இழப்பீடாக ஒரு நாளைக்கு ரூ.5,000 செலுத்த வேண்டும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது. அடமானம் வைக்கப்பட்ட தங்கம் அல்லது வெள்ளி தணிக்கை அல்லது கையாளுதலின் போது தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்தாலோ, கடன் வழங்குபவர்கள் கடன் வாங்குபவர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
