காவல்துறை மானியக்கோரிக்கையில் அறிவித்தபடி 21 முதல் நிலை காவலர்கள் ஏட்டுகளாக பதவி உயர்வு!!

CM Stalin
சட்டப்பேரவையில் இந்த நிதியாண்டுக்கான காவல்துறை மானிய கோரிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், காவலர்கள் பதவி உயர்வில் ஏற்படும் காலதாமதத்தை கருத்தில் கொண்டு, உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள காவலர்களுக்கான நிலை உயர்த்துதல் காலத்தை காவல் ஆளிநர்களை முதல்நிலை காவலர், தலைமை காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர், பதவி நிலை உயர்வு மேம்படுத்துவதற்கான கால அவகாசம் 10+5+10 ஆண்டுகள் என்பதை மாற்றி, 10+3+10 ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, தற்போதுள்ள பதவி நிலை உயர்வுத் திட்டத்தை மாற்றி 10 ஆண்டுகள் பணிபுரிந்த இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல்நிலை காவலர்களாகவும், முதல் நிலை காவலர் பதவியிலிருந்து தலைமை காவலர் பதவி உயர்வு பெறுவதற்கான தகுதியுள்ள காலம் 5 ஆண்டு கால வரம்பை 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, பின்னர் தலைமைக் காவலர்களாக 10 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் (மொத்தம் 23 ஆண்டுகள்) தலைமை காவலர் பதவியிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி நிலை உயர்வு பெற வழிவகை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய பதவி நிலை உயர்வுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.28.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திருத்திய கொள்கை முடிவானது அரசாணை வெளியிடப்பட்ட 12.6.2025 ஜூன் 12ம்தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும். இந்த புதிய பதவி நிலை உயர்வுத் திட்டத்தின்படி 2011ம் ஆண்டில் பணியில் சேர்ந்த 8,533 காவலர்களில், கடந்த 12ம்தேதி அன்று 3 ஆண்டுகள் முதல் நிலை காவலர்களாக பணிநிறைவு செய்து பணியாற்றுபவர்கள் இன்று முதல் பயனடைந்து தலைமை காவலர்களாக பதவி நிலை உயர்வு பெறுவார்கள். மேலும், 2026ம் ஆண்டில், முதல் நிலை காவலர்களாக பணியாற்றும் 11,488 காவலர்கள் இப்புதிய பதவி நிலை உயர்வின்படி தலைமை காவலர்களாக பதவி நிலை உயர்வு பெற உள்ளனர்.