கோவை வெடிகுண்டு வழக்கில் 3 குற்றவாளிகள் கைது; தமிழக காவல்துறைக்கு கிடைத்த வெற்றி: டிஜிபி சங்கர் ஜிவால்

Shankar Jiwal
கோவை வெடிகுண்டு உள்ளிட்ட வழக்குகளில் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 3 அதிபயங்கர குற்றவாளிகளின் பழைய புகைப்படங்களை ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைத்து, அவர்களை அடையாளம் கண்டு கைது செய்தோம். இது தமிழக காவல்துறைக்கு கிடைத்த வெற்றி என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நவம்பர் 2023ல் தமிழ்நாட்டில் தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டது. பல ஆண்டுகள் தலைமறைவான குற்றவாளிகளை கைது செய்யும் பணி தொடங்கப்பட்டது. அதன்படி 2 ஆபரேஷன் தொடங்கப்பட்டது. அதில் ஒரு ஆபரேஷன் பெயர் ‘அறம்’, மற்றொரு ஆபரேஷன் ‘அகழி’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கோவை நகர போலீஸ் மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு இணைந்து இந்த இரண்டு ஆபரேஷன் நடந்தது. அறம் ஆபரேஷனில் ஆந்திரா போலீஸ் உதவியுடனும், அகழி ஆபரேஷனில் கர்நாடகா போலீசுடனும் இருந்து, ஒன்றிய உளவுத்துறையுடன் தொடர்பு வைத்து நடவடிக்கை மேற்கொண்டோம். அதன் பயனாக 3 தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். குற்றவாளிகள் பெயர் அபுபக்கர் சித்திக், முகமது அலி, டெயிலர் ராஜா. இந்த வழக்கில் தமிழ்நாடு போலீஸ் திறமையாக செயல்பட்டு 3 குற்றவாளிகளை ஒரு வாரத்தில் கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட 3 பேரின் இளம் வயது புகைப்படங்கள் மட்டும் நமது போலீசாரிடம் இருந்தது. அதை வைத்து தற்போது அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அடையாளம் காணமுடியாது. எனவே நாங்கள் 3 குற்றவாளிகளின் புகைப்படங்களை ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் தற்போது அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று வடிவமைத்து அதன் மூலம் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்துள்ளோம். இன்றைய காலத்தில் தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவில் 181 காவல் அதிகாரிகள் உள்ளனர். அதில் 4 எஸ்பிக்கள் உள்ளனர். அபுபக்கர் சித்திக் 1995ம் ஆண்டு முதல் தலைமறைவானவர். ஆனால் அவர் 2012 வரை பல்வேறு வழக்குகளில் தொடர்பில் இருந்துள்ளார். அதேபோல் முகமது அலி 1995 வழக்கில் மட்டும் தான் உள்ளார். கைது செய்யப்பட்ட 3 குற்றவாளிகளும் சட்டப்படி 24 மணி நேரத்தில் சிறையில் அடைக்கப்பட வேண்டும். இதனால் அவர்களை நாங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம். அதன் பிறகு தான் வழக்கு தொடர்பான பின்னணி நிலவரங்கள் குறித்து தெரியவரும். முதற்கட்ட விசாரணையில் தலைமறைவாக இருந்த ஊர்களில் ஒருவர் துணி வியாபாரம், பாத்திரம் விற்பனை கடை, ஒருவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். அவர்கள் அடிக்கடி தங்களது அடையாளங்களை மாற்றிக்கொண்டே வந்துள்ளனர். 3 பேரில் டெய்லர் ராஜா மட்டும் அல் உம்மா அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளார். மற்ற 2 பேருக்கும் எந்த அமைப்புகளுடனும் தொடர்பில் இல்லை. இருந்தாலும் விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும். இந்த வழக்குகளில் 99 சதவீத குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். இந்த வெடிகுண்டு வழக்குகளில் தலைமறைவாக வெகு சிலர் மட்டுமே. அவர்கள் பிணையில் வெளியே வந்து தலைமறைவானவர்கள். தற்போது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அதுதொடர்பாக முழு தகவல்கள் தெரிவிக்க முடியாது என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.