லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்த குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: வரும் 12ம் தேதி எழுத்துத் தேர்வு நடக்கிறது!!

TNPSC
லட்சக்கணக்கானோர் போட்டி போட்டு விண்ணப்பித்துள்ள குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு வரும் 12ம் தேதியன்று நடக்கிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3,935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 24ம் தேதி வெளியிட்டது. அதில் 215 கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ), 1,621 இளநிலை உதவியாளர்(பிணையமற்றது), 239 இளநிலை வருவாய் ஆய்வாளர், 1,099 தட்டச்சர், 368 சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3), 54 உதவியாளர், 19 கள உதவியாளர், 62 வனக் காப்பாளர், 35 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், 71 வனக் காவலர் உள்ளிட்ட 25 வகையான பணிகளில் 3,935 காலிப்பணியிடங்களுகு தேர்வு அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இதனை tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற இணையதளப் பக்கத்தில் சென்று விண்ணப்பதாரர்கள் தங்களது ஒரு முறை பதிவேற்றம்(ஓடிஆர்) மூலமாக, தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 4 தேர்வானது வரும் 12ம் தேதியன்று நடக்கிறது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்கும் இந்த தேர்வில் கிட்டத்தட்ட 20 லட்சம்பேர் பங்கேற்க உள்ளனர். குரூப் 4 பணி தேர்வு பட்டியல் வெளியீடு: இதனிடையே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகளுக்கான கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு மற்றம் நடைச் சோதனைக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல், 3 தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உடற்தகுதித் தேர்வு மற்றும் நடைச்சோதனைக்கான நாள் மற்றும் நடைபெறும் இடம் தொடர்பான விபரங்கள் தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் அறிவிக்கப்படும். உடற்தகுதித் தேர்வு மற்றும் நடைச்சோதனைக்கு அழைக்கப்படும் அனைவரும் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.