10-ந்தேதி முதல் மீண்டும் தீவிரம் அடையும் வடகிழக்கு பருவமழை!!
rain
தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் வரை தீவிரம் அடைந்து இருந்த நிலையில், அதன் பிறகு சற்று ஓய்வு கொடுத்து இருக்கிறது. ஆங்காங்கே சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவாகி வந்தாலும், பெரிய அளவுக்கு மழை இல்லை. பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒரு பெரிய மழைப் பாதிப்பு வந்ததும், அதன் பிறகு பெரிய அளவில் மழை நிகழ்வுகள் எதுவும் இருக்காது. ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க இடைவெளி இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அப்படி இருக்க வாய்ப்பு இல்லை என்பது போலவே அடுத்தடுத்து வரக்கூடிய வானிலை நிகழ்வுகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. அந்த வகையில் தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அது மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக பகுதிகளை நோக்கி நகர உள்ளதாகவும், தமிழக கடற்கரை அருகே மெதுவாக நகர்ந்து செல்லவும், மையம் கொள்ளவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு நகர்ந்து வரும்பட்சத்தில் வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழை பரவலாக இருக்கும் எனவும், இந்த மழை நிகழ்வு வருகிற 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் பதிவாகக்கூடும் எனவும் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்வு முடிந்த அடுத்த 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே சொல்லப்பட்ட பெரிய நிகழ்வு தொடங்குகிறது. அதுவும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி, புயலாகவும் வலுப்பெறக் கூடும் என சொல்லப்படுகிறது. புயலாக வலுப்பெற்றால், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்றும், சென்னைக்கும்-நாகைக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்றும், காற்றுடன் மழையை கொடுக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் வருகிற 10-ந் தேதி முதல் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய இருப்பதும், 'போதும்பா மழை' என கதறவிடும் அளவுக்கு மழையின் தாக்கம் இருக்க வாய்ப்பு அதிகமாகவே இருப்பதும் தெரியவருகிறது. நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு உயரவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படவும், நிலத்தில் ஈரப்பதம் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதால், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.