ஊட்டி, கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் அவசியம்; நாளை முதல் அமல்!!

ஊட்டி கொடைக்கானல்
ஊட்டி, கொடைக்கானலுக்கு வருடம் தோறும் சுற்றுலாப் பயணிகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா, வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். சீசன் காலங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மலைச்சாலையில் பல மணி நேரம் நகராமல் அணிவகுத்து நின்று வருகிறது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களான கோடை காலத்தில் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளாலும், அவர்கள் வந்து செல்லும் வாகனங்களாலும் நீலகிரி மாவட்டத்தில் 2 மாதங்களும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் வனப்பகுதிகளுக்கு வரும்போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. வெளியூரில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் கண்டிப்பாக இ-பாஸ் பெற்றே நீலகிரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி ஏற்கனவே உள்ள இ-பாஸ் நடைமுறை இந்த ஆண்டும் தொடர வேண்டும். மேலும் இ-பாஸ் நடைமுறையை பின்பற்றி வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும். மேலும் இந்த புதிய கட்டுப்பாடுகளை வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை கண்டிப்பான முறையில் மாவட்ட நிர்வாகங்கள் அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்துவதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். நாளை (1-ந் தேதி) முதல் புதிய கட்டுப்பாடுகள் நீலகிரி மாவட்டத்தில் அமலுக்கு வர உள்ளது. மாவட்டத்தில் நாடுகாணி, குஞ்சப்பனை, பர்லியார், கக்கநல்லா, கெத்தை, தேவாலா என 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் அனைத்திலும் நாளை முதல் சுற்றுலா வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சுற்றுலா வருபவர்கள் இ-பாஸ் பெற்றுள்ளனரா? தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருகின்றனரா? என சோதனை செய்ய உள்ளனர். இ-பாஸ் பெறாதவர்களுக்கு அந்த இடத்திலேயே இ-பாஸ் எடுத்து கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஐகோர்ட்டு கூறியுள்ளபடி வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும், வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி கொடுக்க உள்ளனர். உள்ளூர் மக்களுக்கும், அரசு பஸ்களில் வருபவர்களுக்கும் இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி வருவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்துள்ளதாகவும், இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இ-பாஸ் மற்றும் வாகன கட்டுப்பாட்டை ரத்து செய்யக் கோரி அவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றுமுன்தினம் தங்கள் கடைகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். நாளை மறுநாள் (2-ந் தேதி) மாவட்டம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். கொடைக்கானலில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படும். அப்போது தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் அது குறித்த ஏற்பாடுகள் குறித்தும், கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்தும் கலெக்டர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், கொடைக்கானல் பஸ் நிலையம் அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் 100 வாகனங்கள் நிறுத்தும் வகையில் நகராட்சித்துறை சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒருவார காலத்தில் முடிவடையும் தருவாயில் உள்ளது. அப்சர்வேட்ரி, ரோஸ் கார்டன் எதிர்புறம், பிரையண்ட் பார்க் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோர வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலியான இடங்களில் தற்காலிக சாலையோர வாகனம் நிறுத்தம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காவல்துறையின் சார்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவழி பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் மாதிரி ஒருவழி பாதை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் தற்போதுள்ள நடைமுறை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ரோஸ் கார்டன், பிரையண்ட் பார்க் ஆகிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து துறை சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொடைக்கானல் நகராட்சியின் சார்பில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்படும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, காவல் துறையின் சார்பில் வழங்கப்படும் கியூ.ஆர். கோடு மூலம் அவசரம் மற்றும் அவசியம் குறித்து தெரிவிக்கும் வகையில் உதவி மையம் அமைக்கப்படும். சுற்றுலா மற்றும் பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில், இந்த உதவி மையத்தினை மேலும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 25 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படும். சென்ற வருடத்தில் 15 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 10 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படும். மேலும், 25 இடங்களில் ஆர்.ஓ. குடிநீர் முறை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினந்தோறும் குடிநீரை ஆய்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை சாலைகளில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் விதி மீறல் இருப்பதாக தெரிய வருகிறது. அதனால் கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை தவிர மற்ற நேரங்களில் சாலைகளில் நிறுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.