ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்- 500 படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு!!
fishermen
ராமேசுவரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களது படகுகளை சிறைபிடிப்பதும் தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 4-ம் தேதி மிக்கேல் ராஜ், நிஜோ ஆகியோருக்கு சொந்தமான 2 விசை படகுகளில் 14 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகையும் அதிலிருந்த மீனவர்கள் ரிபாக்சன், ராஜபிரபு, அரவிந்த், ராபின்ஸ்டன், முனீஸ்வரன், பிரசாந்த், ஆரோக்கியம், பெட்ரிக் நாதன், யோபு, ஜான் இம்மரசன், அருள் பிரிட்சன், நிஷாத், வினித், அந்தோணி லிஸ்பன் ஆகிய 14 பேரை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். அவர்கள் 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 19-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ரபீக் உத்தரவிட்டார். இதையடுத்து 14 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் துறைமுக பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். சகாயம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 14 மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடித்ததை கண்டித்தும், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து இன்று (7-ந் தேதி) ஒரு நாள் மட்டும் ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.