தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்
supreme court
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாநிலத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது இருந்தே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அவர் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஆளுநராக இருக்கும் நபர் அரசியல் ரீதியாக செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் கடந்த மாதம் 10ம் தேதி ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘ அரசியல் சாசனத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும். அதற்கான உரிய உத்தரவை குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகம் மற்றும் ஒன்றிய அரசு ஆகியவைக்கு பரிந்துரையுடன் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற கோருவது அரசியலமைப்பு நடைமுறைக்கு புறம்பாக உள்ளது எனக்கூறி ஜெயசுகின் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆளுநர் – அரசு தொடர்பாக பிரச்னைகள், முரண்பாடுகள் வருகிறதோ, அப்போதெல்லாம் நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பித்து வருகிறது. எனவே இம்மனுவை ஏற்க முடியாது என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.