அவிநாசி திருத்தலம் !

அவிநாசி திருத்தலம் !
X

அவிநாசி திருத்தலம்

சென்னை -கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அவிநாசி திருத்தலம் மிகப் பழமையான நகரமாகும் .சேர ,சோழ, பாண்டிய மன்னர்களாலும், ஹொய்சாளர் மற்றும் மைசூர் மன்னர்களாலும், ஆளப்பெற்ற கொங்கு நாட்டில் உள்ள அவிநாசி மிகப் பழமையான ஊராகும். சிவபெருமானின் அக்னி தாண்டவம் கண்டு அஞ்சிய தேவர்கள் புகுந்து ஒளிந்து கொண்டு பின்னர் இறைவனின் அருள்ஒளி பெற்றதால் இத்தலம் 'திருப்புக்கொளியூர் 'என்று பெயர் பெற்றது.

அன்னை பராசக்தி பாதிரி மரத்தின் கீழ் தவம் செய்து வலப்பாகம் பெற்று பெரும் கருணை நாயகி என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டு விளங்குவது இத்தலம்.இத் திருக்கோயில் சுமார் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழுக்குரியதாகும்.காசியில் செய்யும் வினை தீர்க்கும் வழிபாட்டை இங்கு செய்வதால் வினைகள் தீரும் என்ற காரணத்தால் கொங்கு நாட்டு காசி என்றும், தட்சிணகாசி என்றும் ,வாரணவாசி என்றும், தென்பிரயாகை என்றும் எக்காலமும் நாசமின்றி நிலைத்து நிற்பதால் அவிநாசி என்றும் பெயர் பெற்று விளங்குவதாகும். சிவபெருமானின் திருமுடியை கண்டதாக உண்மைக்கு புறம்பாக உரைத்த பிரம்மதேவன் தன் சாபம் நீங்க வழிபட்டு படைப்புத் தொழிலை மீண்டும் தொடங்கியஸ்தலம் அவினாசி. இந்திரனின் சாபம் பெற்று கானகத்தில் திரிந்து உழன்ற இந்திரனின் வாகனமாகிய ஐராவதம் என்னும் வெள்ளை யானை தன் சாபம் நீங்க வழிபட்ட ஸ்தலம் அவிநாசி. இலங்கையில் அசுர குலத்தில் பிறந்த தாடகை என்னும் அரக்கிபுத்திர பேறு வேண்டி அவிநாசியில் தவமி யற்றி பின்னாளில் மாரீசனை மகனாக பெற்றாள் .

வடநாட்டு மன்னன் தர்மசேனன் தவம் செய்து புத்திரப்பேறு பெற்ற ஸ்தலம் அவினாசி. அனைத்திற்கும் மேலாக முதலையால் விழுங்கப்பட்ட ஒரு சிறுவனை 3 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அன்பு கட்டளையால் சிவபெருமான் மூன்றாண்டு வளர்ச்சி பெற்ற பிள்ளையாக முதலை வாயில் இருந்து மீட்டளித்த பெருமைக்குரிய ஸ்தலம் அவிநாசி. 'காசியே அவினாசி' என்பது பதஞ்சலி முனிவர் குருநாத பண்டாரம் மற்றும் வள்ளல் தம்பிரான் ஆகியோரின் வாழ்வில் ஏற்பட்ட செயல்களால் நிரூபனமான உண்மையாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான ஸ்தலம் என்பதும் ஐயம் இன்றி நிரூபனமாகிறது.

Tags

Next Story