ஆக.15-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு!!

trump and putin
ரஷ்ய அதிபர் புதினின் எச்சரிக்கையையும் மீறி, நேட்டோவுடன் இணைந்து செயல்பட்டதால், உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24-ம் தேதி போரை தொடங்கினார் புதின். அமைதியை ஏற்படுத்த பல நாட்டு தலைவர்கள் எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததால், போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதில் மத்தியஸ்தராக இருந்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் வரும் 15-ம் தேதி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து அவர் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இத்தகவலை வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ளது. கிழக்கு உக்ரைன் பகுதியில் இருந்து உக்ரைன் படைகள், நேட்டோ படைகள் வெளியேற வேண்டும். அப்படி செய்தால் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்கிறேன்’ என்று அதிபர் புதின் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரை நிறுத்துவதற்கு, கிழக்கு உக்ரைனை ரஷ்யா கேட்கிறது. அத்துடன் அந்தப் பகுதியை சர்வதேச நாடுகள் ரஷ்யாவுக்கானதாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐரோப்பிய தலைவர்கள், உக்ரைன் அதிகாரிகள் கூறியதாகவும் அந்தப் பத்திரிகை கூறியுள்ளது. இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, ‘‘எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் பிரதேச மாற்றங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். ஆனால், சில பகுதிகளை நாங்கள் திரும்ப பெறுவோம். சில பகுதிகள் மாறலாம். அது இரு தரப்புக்கும் நன்மை தருவதாக இருக்கும். என்னைப் பொருத்தவரை புதின் அமைதியை விரும்புவதாக நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார். ‘புதினை சந்திக்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். அலாஸ்காவில் இந்த சந்திப்பு 15-ம்தேதி நடைபெறும்’ என்று சமூக வலைதளத்திலும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். ஜெனீவாவில் அமெரிக்கா – ரஷ்யா மாநாடு கடந்த 2021-ல் நடந்தபோது, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்து பேசினர். அதன்பிறகு ரஷ்ய அதிபர் புதினை தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனையும் சேர்க்க வேண்டும் என அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘உக்ரைனின் பிராந்திய இறையாண்மையில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. நீடித்த அமைதிக்கான பேச்சுவார்த்தை மேஜையில் உக்ரைனின் குரலும் உள்ளடக்கியிருக்க வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர், ‘உக்ரைன் இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் அமைதிக்கு எதிரான முடிவுகளாகும். அவை எந்த பலனையும் தராது. செத்துப்போன முடிவுகள். அவை ஒருபோதும் வேலை செய்யாது’ என்றும் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். ரஷ்யா செய்தவற்றுக்காக அதற்கு எந்த விருதையும் உக்ரைன் கொடுக்காது எனக்கூறியுள்ள ஜெலன்ஸ்கி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு தனது நிலத்தை உக்ரைன் மக்கள் விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்றும் சாடியிருந்தார்.