கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு- சுடர் பயணம் தொடக்கம் !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டிற்காக கோவை மாவட்டத்தின் சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு சதுக்கத்தில் இருந்து மதுரை நோக்கி சுடர் பயணம் தொடங்கியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு இன்று முதல் ஏப்ரல் 6 வரை மதுரையில் நடைபெறவுள்ளது. இதனை ஒட்டி, கோவை மாவட்டத்தின் சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு சதுக்கத்தில் இருந்து மதுரை நோக்கி சுடர் பயணம் நேற்று தொடங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சுடர் பயணம் வாகனப் பேரணியாக புறப்பட்டது. இந்நிகழ்வுக்கு கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் தலைமை தாங்கினார். சுடர் ஜோதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எடுத்துக் கொடுக்க, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ. லாசர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து,சின்னியம்பாளையம் தியாகிகளின் நினைவு சுடருக்கு சூலூர் புதிய பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் இடைக்குழு சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இடைக்குழு செயலாளர் ஏ. சந்திரன் தலைமையில் ஜமாப் அடித்தும், வண்ணப் பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக வரவேற்கப்பட்டது. முதல் நாள் பயணம் சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்து அவிநாசி, திருப்பூர், பல்லடம் வழியாக பழனியை சென்றடைந்தது. இன்று பழனியில் இருந்து சுடர் பயணம் மீண்டும் தொடங்கி, கன்னிவாடி, வத்தலகுண்டு, நிலக்கோட்டை, பள்ளப்பட்டி, சோழவந்தான் வழியாக சென்று, மாலையில் மதுரை சமயநல்லூரை அடையும் என திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story