கோவை: கும்பாபிஷேகம்- இறுதிக்கட்டத்தை எட்டிய திருப்பணிகள்!

கும்பாபிஷேகம் நெருங்கும் வேளையில் தொடர்ந்து பணிகளை கவனித்து வரும் அறநிலையத்துறை அதிகாரிகள்.
முருகப்பெருமானின் ஏழாம் படைவீடாகப் போற்றப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், வரும் ஏப்ரல் 4-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2013-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட நிலையில், 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்து திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 20-ம் தேதி பாலாலயத்துடன் தொடங்கிய இந்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராஜகோபுரம், மூலஸ்தானம், ஆதி மூலஸ்தானம் மற்றும் பிற சன்னதிகளில் வர்ணம் பூசும் பணிகள் நிறைவடைந்துள்ளது. ராஜகோபுரம் மற்றும் பிற சன்னதிகளில் புதிய கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 70 அடி நீளம், 70 அடி அகலம் மற்றும் 40 அடி நீளம், 60 அடி அகலம் மற்றும் 40 அடி நீளம், 40 அடி அகலம் கொண்ட மூன்று யாகசாலை மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. யாகசாலை மண்டபத்தில் 73 குண்டங்களும், 12 வேதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. சன்னதிகளின் மேல்தளத்தில் மழைநீர் உட்புகாதவாறு சூரிய ஒளி பிரதிபலிப்பு ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளன. வசந்த மண்டபம் உள்ளிட்ட அனைத்து திருப்பணிகளும் நிறைவடைந்துள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அறநிலையத்துறை அதிகாரிகள் கும்பாபிஷேக பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Next Story