வால்பாறை: சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு - மக்கள் அச்சம் !

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக, வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நல்லகாத்து மற்றும் நடுமலை எஸ்டேட் தேயிலை தோட்டத்திற்கு அருகில் உள்ள சிறுகுன்றா எஸ்டேட் வனப்பகுதியில் இருந்து சிறுத்தைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதாக கூறப்படுகிறது. நேற்று மாலை இரண்டு சிறுத்தைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதிக்கு பின்புறம் உள்ள தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்தன. அதில் ஒரு சிறுத்தை நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, ஒரு வீட்டின் மாடியில் ஏறி நடந்து சென்றுள்ளது. ஏற்கனவே, வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் நடமாடிய ஒரு சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு காடம்பாறையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. தற்போது மீண்டும் இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் அவற்றை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story